சண்டே ஸ்பெஷல்: சுவையான, மணமான நெய் ரவா கிச்சடி செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான, மணமான நெய் ரவா கிச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
சண்டே ஸ்பெஷல்: சுவையான, மணமான நெய் ரவா கிச்சடி செய்வது எப்படி..?
Published on

தேவையான பொருட்கள்:-

ரவை - 1 கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - சிறிய துண்டு

கறிவேப்பிலை - சிறிதளவு

முந்திரி பருப்பு - 10

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கேரட் - 1

பீன்ஸ் - 5

பச்சை பட்டாணி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 2½ கப்

செய்முறை:-

அடுப்பை ஆன் செய்து, அதில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து, ரவையை கொட்டி மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். ரவையை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு, அதே பாத்திரத்தில் கடலை எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடாகியதும் தாளிப்பதற்கு கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும். நன்கு பொரிந்து வந்ததும், நீட்டமாக வெட்டிவைத்த பச்சை மிளகாயை சேர்க்கவும். தொடர்ந்து, பொடி பொடியாக வெட்டிவைத்த இஞ்சி துண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து, முந்திரி பருப்பை சேர்த்து கிளறவும். தொடர்ந்து, பொடியாக வெட்டிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், நிறத்துக்காக மஞ்சள் பொடி சேர்க்கவும். பச்சை வாசனை போன உடன், சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். அத்துடன் சிறிது சிறிதாக வெட்டிய கேரட், பீன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும். கொஞ்சம் பச்சை பட்டாணியையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, காய்கறியை நன்கு வேகவிடவும்.

அதன்பிறகு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்த உடன், வறுத்து வைத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டி விழாமல் கலந்துவிடவும். சிறிது நேரத்தில் தண்ணீரை ரவை இழுத்துக்கொள்ளும். கடைசியாக நெய் சேர்த்து கலந்துவிடவும். சுவையான, மணமான நெய் ரவா கிச்சடி ரெடி. காலை மற்றும் இரவு நேரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com