

கொல்கத்தாவில் விசுவநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி ஆகியோருக்கு கடந்த 1863-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி சுவாமி விவேகானந்தர் மகனாக பிறந்தார். இவரது தாய் மொழி வங்காளம் ஆகும். சிறு வயது முதலே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசை மற்றும் தியானம் ஆகியவற்றை பயின்றார். மேலும் பகுத்தறிவாளராகவும் விளங்கினார்.
1879-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கொல்கத்தாவில் உள்ள மாநில கல்லூரியில் விவேகானந்தர் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஸ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கு மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு ஆகியவற்றை படித்தார். அப்போது அவருக்கு கடவுள் தொடர்பான உண்மைகள் குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தது. மக்கள் கடவுளை வழிபட்டாலும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவது முரண்பாடாக தோன்றியது. இதுகுறித்து பலரிடமும் விவாதித்தார்.
பின்னர் அப்போதைய காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினராக சேர்ந்தார். ஆனால் அங்கு அவரது கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. பின்னர் கடவுகள் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்றார். அவரை முதன்முதலில் 1881-ம் ஆண்டு விவேகானந்தர் சந்தித்தார். எதையும் பகுத்தறிந்து கொள்ளும் அவரால் ஆரம்பத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுகளை வழிபடுவதை யும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளால் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் ஆகியவற்றின் அவசியத்தை விவேகானந்தரால் புரிந்து கொள்ள முடிந்தது. 1886-ம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் உயிரிழந்த பிறகு விவேகானந்தர் துறவியானார். அதன்பின்னர் 4 ஆண்டுகள் இந்திய துணை கண்டம் முழுவதும் சுற்றினார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை ஆகியவற்றை அனுபவித்து அறிந்தார். அந்த காலக்கட்டத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழே இருந்தது. அதாவது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த காலம் அது.
1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி கன்னியாகுமரிக்கு விவேகானந்தர் சென்றார். அங்கு கடல் நடுவில் உள்ள பாறை மீது 3 நாட்கள் தியானம் செய்தார். அப்போது இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பிற்காலத்தில் அவர் கூறி உள்ளார். தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்த விவேகானந் தரிடம் அமெரிக்காவில் நடைபெறும் உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இளைஞர்கள் கோரிக்கை விடுத்த னர். இதை ஏற்று அவர் அமெரிக்கா சென்றார். அங்கு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட் டில் அவர் ஆற்றிய சொற் பொழிவு களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகளில் பிற நாடுகளுக்கு சென்று பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றினார். மேலும் நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார். உலக அரங்கில் இந்து மத புகழை தனது சொற்பொழிவால் நிலைநிறுத்தினார். 1897-ம் ஆண்டு விவேகானந்தர் இந்தியா திரும்பினார். இலங்கை வழியாக பாம்பன் குந்துகால் பகுதிக்கு வந்த அவருக்கு ராமநாதபுர சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் கொல்கத்தாவில் ராமகிருஷ்ணன இயக்கம் மற்றும் மடம் ஆகியவற்றை நிறுவினார், விவேகானந்தர்.
இதையடுத்து 1899-ம் ஆண்டு முதல் 1900-ம் ஆண்டு வரை 2-வது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராக அவரது கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடைய செய்வதாக அமைந்தது. 19-ம் நூற்றாண்டின் தலைசிறந்த சமய தலைவர்களுக்கு ஒருவராக கருதப்பட்ட விவேகானந்தர், 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி தனது 39-வது வயதில் பேலூரில் காலமானார். சென்னையில் இருந்து சென்ற தமிழர் சுமேரியா நாகரிகம், மலபார் பகுதியில் இருந்து சென்ற தமிழர் எகிப்திய நாகரிகம் ஆகியவற்றை உருவாக்கினர் என்றும், அவர்கள் விட்டு சென்ற தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது என்றும் தமிழர்கள் குறித்து விவேகானந்தர் கூறியதாக சொல்லப்படுகிறது.