கோலி, ரூட்டாலும் முறியடிக்க முடியாத சச்சினின் அரிய சாதனைகள் - மாஸ்டர் பிளாஸ்டரின் மெகா ரெக்கார்ட்ஸ்

சச்சின் டெண்டுல்கர் படைத்த சில சாதனைகள் இன்றளவும் தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
சச்சின்
Published on: 

சென்னை,

விராட் கோலியாலும், ஜோ ரூட்டாலும் கூட முடியாத சச்சினின் அரிய சாதனைகள் என்னென்ன என்பதை தற்போது கண்போம்.

கடினமான சவால்

சர்வதேச கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்கள் தங்களது திறமையால் சாதனைகளை படைத்துள்ளனர். இருப்பினும், இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் படைத்த சில சாதனைகள் இன்றளவும் தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

சுமார் 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின், பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்ததுடன், ஏராளமான சாதனைகளையும் தன்வசப்படுத்தினார். தற்போதைய தலைமுறையின் நட்சத்திரமான விராட் கோலி மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் போன்றவர்கள்கூட சச்சினின் சில சாதனைகளை எட்டுவது கடினமான சவாலாகவே உள்ளது.

1. அதிக சர்வதேச போட்டிகள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தக்கவைத்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 664 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 சர்வதேசப் போட்டி அடங்கும்.

விராட் கோலி 565 போட்டிகளும் , ஜோ ரூட் 396 போட்டிகளும் விளையாடியுள்ளனர்.

2. அதிக பவுண்டரிகள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற சாதனையும் சச்சின் டெண்டுல்கரிடமே உள்ளது. தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் மொத்தம் 4,340 பவுண்டரிகளை அடித்துள்ளார். இதில் 4,076 நான்குகளும், 264 சிக்சர்களும் அடங்கும்.

விராட் மொத்தம் 3,133 பவுண்டரிகளை அடித்துள்ளார். இதில் 2798 நான்குகளும், 335 சிக்சர்களும் அடங்கும்.

3. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கே சொந்தமானது. மூன்று வடிவங்களிலும் சேர்த்து அவர் 34,357 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டி20 சர்வதேசப் போட்டியில் 10 ரன்களும் அடங்கும்.

ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிப்படையில் தற்போது விராட் கோலி முன்னணியில் இருந்தாலும், சச்சினின் ஒட்டுமொத்த ரன்களை எட்டுவது எளிதல்ல. அதேபோல், ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், சச்சினின் ஆல்-டைம் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது.

என்றும் நிலைத்திருக்கும்

கிரிக்கெட்டில் சாதனைகள் முறியடிக்கப்படுவதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்றாலும், சச்சின் டெண்டுல்கர் படைத்த இந்த மைல்கற்கள் அவரது நீண்டகால உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாக உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com