

வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் 19 கிலோ எடையில் விற் பனை செய்யப்படும்போது, வீட்டு உப யோகத்துக்கான கியாஸ் 14.2 கிலோ எடையில் ஏன் விற்கப்படுகிறது? 14 கிலோ அல்லது 15 கிலோ என்ற எடை பிரிவில் ஏன் விற்பனை செய்யப்படுவது இல்லை என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. அதற்கான விரிவான காரணங்களை பார்ப்போம்...!
இந்தியாவில் வீட்டு பயன்பாட்டுக்கு திரவ எரிவாயு (எல்.பி.ஜி.) பயன்படுத்துவது 1950-களில் தொடங்கியது. அப்போது பர்மா ஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் 14.2 எடையிலேயே கியாஸ் வினியோகம் செய்தது. பின்னர் இந்த நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கழகமாக உருவெடுத்தது. ஆனாலும் கியாஸ் எடையில் எந்த மாற்றங்களும் கொண்டுவரப்பட வில்லை.
பர்மா ஷெல் நிறுவனம், 3 முக்கிய காரணங்களை முன் வைத்தே 14.2 கிலோ எடையில் கியாஸ் விற்பனை செய்யும் முடிவை எடுத்தது. அதில் ஒன்று கியாஸ் சிலிண்டரை எடுத்து செல்லுதல். சிலிண்டர் மற்றும் அதில் நிரப்பப்படும் 14.2 கிலோ கியாஸ் சேர்த்தால் சுமார் 29 முதல் 30 கிலோ எடை வரும். அந்த காலகட்டத்தில் சராசரி மனிதன் இந்த எடையை எளிதாக தூக்கக்கூடியதாக இருந்தது. இது 30 கிலோவையும் தாண்டி இருந்தால் சிலிண்டரை கையாள்வது சற்று கடினமாக இருக்கும்.
2-வதாக நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்தினருக்கு சமையல் செய்ய எவ்வளவு கியாஸ் செலவாகும் என்பதை வைத்து முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் 14 கிலோ எடையுடைய கியாஸ், ஒரு சாதாரண குடும்பத்துக்கு சமையல் செய்ய 30 முதல் 45 நாட்கள் தாராளமாக வருவதாக கண்டறியப்பட்டது. ஒரு குடும்பம் ஒரு முறை கியாஸ் சிலிண்டர் வாங்கினால் ஒரு மாதம் முழுமைக்கும் எரிபொருள் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இதனால் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதத்தில் ஒரு குடும்பத்துக்கு டெலிவரி செய்யும் வகையில் கியாஸ் நிறுவனங்களுக்கான பணியும் எளிமையாகியது.
மூன்றாவது மிகவும் முக்கியமான தொழில்நுட்ப காரணம் ஆகும். ஏனென்றால் சிலிண்டரின் உள்ளே கியாஸ் அழுத்தத்துடன் நிரப்பப்படுகிறது. இந்த அழுத்தத்தை தாங்கும் வகையிலேயே இரும்பு சிலிண்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் 14.2 கிலோ எடையை விட அதிகமாக கியாஸ் நிரப்ப முயற்சித்தால் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கியாஸ் நிரப்ப இதுவே சரியான அளவு என்று அப்போது தீர்மானிக்கட்பட்டது.
எல்.பி.ஜி. என்பது புரோபென் மற்றும் பியூடேன் ஆகிய வாயுக்களின் கலவையாகும். இதன் எடை மற்றும் அடர்த்தி ஆகியவை வேறுபடும். எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் வெற்று இடம், எரிவாயு நிரம்பிய பகுதி மற்றும் அழுத்தம் ஆகியவற்றை கணக்கிட்டே 14.2 கிலோ எரிவாயு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோவிலும், சிறிய அளவிலான தேவைக்கு பயன்ப டுத்தகையில் எடுத்துச் செல்லும் வகையிலான 2 கிலோ மற்றும் 5 கிலோ, 10 கிலோ எடை பிரிவிலும் கியாஸ் விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.