ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது ஏன்?

ஆடிப்பெருக்கில் எந்த பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலிக் கயிறு மாற்றுவது ஏன்?
Published on

உவிவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவும் முக்கிய ஆதாரமான நீர்நிலைகளை போற்றி வழிபடும் ‘ஆடிப்பெருக்கு விழா’, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடி 18-ம் தேதி கொண்டாப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்டு 3ம் தேதி (இன்று) ஆடிப்பெருக்கு சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்க காலத்தில் நதிகளுக்கு விழா

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் தனித்துவமான இடத்தைப் பெறுவது ஆடிப்பெருக்கு. சங்க இலக்கியங்களில் பெண்கள் நதிகளுக்கு விழா எடுத்ததாகவும், நதியை ஒரு கன்னிப் பெண்ணாகக் கருதி வழிபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையையும், நீரையும் தெய்வமாக மதித்த தமிழர்களின் வாழ்க்கை முறையை இந்த மரபுகள் வெளிப்படுத்துகின்றன.

சப்த கன்னிகள் வழிபாட்டின் சிறப்பு

ஆடிப்பெருக்கு நாளில் சப்த கன்னிகள் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நதியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வரும் நாளில், வளமும் நலமும் பெருக வேண்டும் என்ற வேண்டுதலுடன் பெண்கள் வழிபாடுகளை மேற்கொள்வது பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் பாரம்பரியமாக உள்ளது.

தாலிக்கயிறு மாற்றும் வழக்கம்

ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள், குறிப்பாக புதுமணப் பெண்கள், தங்களது தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்வது வழக்கமாக உள்ளது. இது மாங்கல்ய பலம் அதிகரிக்கவும், நீண்ட ஆயுளுடன் கணவன்-மனைவி வாழ்வு அமையவும் வேண்டி செய்யப்படும் சடங்காக நம்பப்படுகிறது.

அதேபோல், திருமணமாகாத கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றை அணிந்து, நல்ல வரன் அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதும் இந்நாளின் முக்கிய மரபுகளில் ஒன்றாகும்.

ஜோதிட முக்கியத்துவம்

ஆடி மாதம் கடக ராசிக்குரிய மாதமாகும். இந்த ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அமைந்துள்ளன. ஆடி மாதம் சூரியன் பூசம் நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஜோதிட ரீதியாக இந்த நட்சத்திர மாற்றம் ஒரு தனித்துவமான ஆற்றலை வழங்கும் காலமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நாளில் பல்வேறு ஆன்மிக சடங்குகளையும் வழிபாடுகளையும் மேற்கொள்ளும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நாளில் வாங்கும் பொருள் பெருகும்

ஆடிப்பெருக்கு நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் வளம் பெருகச் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது. அதனால் பலர் தங்கம், வெள்ளி, தானியங்கள், புதிய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த நாளில் வாங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

குறிப்பாக, ஆடிப்பெருக்கில் நல்ல நேரம் பார்த்து சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் என்பது நம்பிக்கையாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com