உலக மகளிர் தினம்

‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்னும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகள், பெண்களின் உயர்வைப் போற்றுவதாக அமைந்திருக்கிறது.
உலக மகளிர் தினம்
Published on

பெண்கள் உயர்வானவர்கள் என்று நாம் காலம் காலமாக கூறிவந்தாலும், அவர்களின் மீதான அடக்கு முறையும், பாலின பாகுபாடும் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இன்றும் கூட அவை முழுமையாக நீங்கிவிட்டதாக பெருமை கொள்வதற்கில்லை.

உலக மகளிர் தினம் தோன்றியதற்கான விதை, கி.பி. 1789-ல் பாரீஸ் நகரில் போடப்பட்டது. அந்த ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின்போது, பெண்களுக்கும் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம், 16 மணி நேரம் வேலை என்ற கால நேரத்தை குறைக்க வேண்டும், பெண்களுக்கு வாக்குரிமை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. 1857-ம் ஆண்டில் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் ஒன்று கூடி போராடினர்.

இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 1907-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போராட்டம் தீவிரமானது. 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடந்தது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் பங்கேற்று, அனைத்து நாட்டில் உள்ள பெண்களுக்கும் சேர்த்து மகளிர் தினம் ஒன்றை உருவாக்க வேண்டும், பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆவணப்படுத்த வேண்டும், ஆண்களைப் போல பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும், எல்லாவற்றிலும் சமஉரிமை வேண்டும்'' என்று பேசினார்.

அதன்படி சர்வதேச மகளிர் அமைப்பு தொடங்கப்பட்டு, 1911-ம் ஆண்டு முதலே டென்மார்க், ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிப்ரவரி 28-ந் தேதி பெண்கள் தினமாக இருந்தது. பிறகு ஒவ்வொரு பிப்ரவரி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. 1975-ம் ஆண்டில்தான் மார்ச் 8-ந் தேதியை உலக பெண்கள் தினமாக கொண்டாடுவது என்று ஒருமனதாக முடிவுஎடுக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானம், 1977-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com