கூடலூர்-கேரள எல்லையில் பரபரப்பு: சர்க்கரை மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி தீயில் கருகியது - தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கேரளாவுக்கு சர்க்கரை மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
Published on

கூடலூர்,

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் நகரம் அமைந்து உள்ளது. கேரள மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக சரக்கு லாரிகளில் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் கர்நாடகாவில் இருந்து 400 சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு லாரி ஒன்று இரவு 9.45 மணிக்கு கூடலூர் வந்தது. பின்னர் கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சரக்கு லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது.

கூடலூர்-கேரள எல்லையில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்க டயர் ஒன்று வெடித்து புகை பரவியது. இதைக்கண்ட டிரைவர் மற்றும் உரிமையாளர் லாரியில் இருந்து இறங்கினர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் டயரில் தீப்பிடித்து லாரியின் பல்வேறு பகுதியில் வேகமாக பரவியது. அடர்ந்த வனம் மற்றும் மலைப்பாதை என்பதால் லாரியில் பரவிய தீயை அணைக்க முடியவில்லை. இதையொட்டி வழிக்கடவு போலீசாருக்கு லாரி உரிமையாளர் அருண் தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து வழிக்கடவு போலீசார் மற்றும் நிலம்பூர் தீயணைப்பு வீரர்கள் அசோகன், யூசப், ஜோசப் உள்ளிட்டோர் 2 தீயணைப்பு லாரிகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த லாரி மீது தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் சர்க்கரை மூட்டைகளிலும் தீ பரவியது. இதனால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் பல மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் லாரி முழுமையாக எரிந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது.

இந்த சம்பவத்தால் கூடலூர்-கேரளா இடையே பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் வாகனங்கள் குறைவாக இருந்தது. இதுகுறித்து வழிக்கடவு போலீசார் கூறும்போது, அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி கொண்டு இடைவிடாமல் லாரியை இயக்கி வந்ததால் தீ பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் முழு விசாரணை நடத்திய பின்னரே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com