சிவன்கோவிலில் கண்டெடுப்பு: சாதி, மோதல்களை தவிர்க்க மக்கள் முடிவு செய்த கல்வெட்டு மன்னன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலத்தை சேர்ந்தது

சாதி, மோதல்களை தவிர்க்க மக்கள் முடிவு செய்த மன்னன் சுந்தரபாண்டியனின் ஆட்சி காலத்தை சேர்ந்த கல்வெட்டு மயிலாடுதுறை அருகே சிவன்கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவன்கோவிலில் கண்டெடுப்பு: சாதி, மோதல்களை தவிர்க்க மக்கள் முடிவு செய்த கல்வெட்டு மன்னன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலத்தை சேர்ந்தது
Published on

தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருமணஞ்சேரி அருகே உள்ளது திருமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் விக்கிரமசோழன் (கி.பி. 1118-1136) கட்டிய பூலோகநாத சுவாமி சிவன் கோவில் உள்ளது. சிதிலமடைந்த இந்த கோவிலை புதுப்பித்து அண்மையில் கும்பாபிஷேகம் செய்தனர்.

அப்போது அந்த கோவில் வளாகத்தினுள் புதைந்து கிடந்த ஒரு கல்வெட்டினை முன்னாள் வங்கி அதிகாரியான வேலூரை சேர்ந்த கல்யாணராமன் என்பவரும், ஊர்மக்களும் கண்டெடுத்து கோவிலின் மகாமண்டபத்தின் வடபுறம் தரையில் நட்டு பாதுகாத்து வைத்துள்ளனர்.

இந்த கல்வெட்டினைப் படியெடுத்து ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது:-

13-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தமிழகத்தில் இருந்த சாதியினர் எல்லாம் தங்களை இடங்கை, வலங்கை எனப் பிரித்துக்கொண்டனர். இம்முறை சோழர், பாண்டியர், விஜயநகரர், நாயக்கர் போன்ற அரசர்கள் காலத்தில் தொடர்ந்து கி.பி. 1900-ம் ஆண்டு வரை இருந்துள்ளது.

இதனால் இரு பிரிவினரிடையே உரிமைகள் பற்றியும், உயர்வு தாழ்வு பற்றியும் அடிக்கடி பூசல்களும், மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இவற்றை பிற்கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எடுத்துக்கூறுகின்றன.

ஒரு காலகட்டத்தில் இடங்கை பிரிவில் 98 சாதிகளும், வலங்கை பிரிவில் 98 சாதிகளும் இருந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் இடங்கை சாதிகள் 6 ஆகவும், வலங்கைப் பிரிவில் 30 சாதிகளும் இருந்துள்ளன. ஆனால், திருமங்கலத்தில் உள்ள கல்வெட்டு கோச்சடையவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் ஆட்சி காலத்தை சேர்ந்தது.

அதில், விருதராஜ பயங்கர வளநாட்டைச் சார்ந்த குறுக்கை நாடு, காளி நாடு, விளத்தூர் நாடு, மாந்துறை நாடு, திருமங்கலநாடு எனப்பெறும் இந்த ஐந்து நாட்டு இடங்கை வலங்கைப்பிரிவினராகிய சாதியினர் எல்லாம் திருமங்கலம் கோவிலில் கூடி இனி சந்திரன், சூரியன் உள்ள அளவும் தங்களுக்குள் இடங்கை, வலங்கைப்பிரிவுகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும், யாரேனும் கொண்டாடுவார்களாயின் அவர்கள் ஐந்து நாட்டிற்கும் அநியாயம் செய்தவர்களாக கருதப்படுவர் என்றும் முடிவு எடுத்து அம்முடிவினை அரசனின் ஆணைபெற்று இங்கு கல்வெட்டாகப் பொறித்துள்ளனர்.

சோழர்களின் ஆட்சி முடிவு பெற்ற பின்பு சோழநாடு பாண்டியர் வசம் இருந்தது. அப்போது இக்கல்வெட்டு பொறிக்கப்பெற்றதாகும். சாதி, மோதல்களைத் தவிர்க்க கோவிலில் வைக்கப்பெற்ற இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புடைய ஒன்றாகும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com