காஷ்மீரில் பரிதாப சம்பவம்; சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

காஷ்மீரில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on

ஜம்மு,

காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்துக்கு உட்பட்ட டாங்கர் கிராமத்தை சேர்ந்தவர் பிஷன் தாஸ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராம்பன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடி வந்தார். அதில் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவில் ஒரு திருமணத்துக்காக வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் பிரித்தம் சிங் என்ற உறவினர் பிஷன் தாஸ் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் பிஷன் தாசின் மனைவி தர்ஷனா தேவி (வயது 36) பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைவரும் தீயில் சிக்கி மரண ஓலமிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினர் வந்து தீ முழுவதையும் அணைத்தனர். எனினும் அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த கோர சம்பவத்தில் பிஷன் தாசின் மனைவி தர்ஷனா தேவி, மகள்கள் அஷூ தேவி (13), சந்தோஷ் தேவி (7), பிரியங்கா தேவி (3) ஆகிய 4 பேரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மற்றொரு மகள் அனிதா தேவி (5), மகன் ஜகிர் சந்த் (1) மற்றும் உறவினர் பிரித்தம் சிங் ஆகிய 3 பேரும் படுகாயங்களுடன் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் நேற்று காலையில் பலியானார்கள். பிரித்தம் சிங்கின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தில் பிஷன் தாசின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த பசுவும், கன்றுக் குட்டியும் கூட உயிரிழந்தன. சம்பவத்தின் போது பிஷன் தாஸ் வெளியே சென்றிருந்ததால் அவர் மட்டும் உயிர் தப்பினார்.

கியாஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் ராம்பன் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com