சிறு, குறுந்தொழில்கள் சங்க மாநாடு நிறைவு விழா - 3 அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரையில் நடந்த சிறு, குறுந்தொழில்கள் சங்க வெள்ளிவிழா மாநாட்டு நிறைவு விழாவில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Published on

மதுரை,

தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தின் 2 நாட்கள் வெள்ளி விழா மாநாடு நேற்று முன்தினம் மதுரையில் தொடங்கியது. இறுதி நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சம்பத், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ஜெயலலிதாவின் எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தொழில் துறையில் மிக வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளோம் என்றார்.

தொழில் துறை அமைச்சர் சம்பத் பேசும் போது கூறியதாவது:-

தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏராளமான முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தொழில் துறையினருக்கு, இணக்கமான அரசாக தமிழக அரசு திகழ்கிறது. இதனால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தொழில் துறையில் நாட்டிலேயே தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. அதே போல் பொருளாதார வளர்ச்சியில் 2-வது இடத்தில் உள்ளது.

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. தென் மாவட்டங்களை இரண்டு கண்களாக பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தென் மாவட்டத்தில் ஏராளமான நிறுவனங்கள் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் சம்மதம் தெரிவித்துள்ளன.

மதுரை-தூத்துக்குடி தொழில் வளர்ச்சி சாலை திட்டம் சென்னை-கன்னியாகுமரி தொழில் வளர்ச்சி சாலை திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இவை 2 திட்டமாக, 21 மாவட்டங்களில் 6 மண்டலமாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஆசிய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. எனவே தென்மாவட்டங்கள் தொழில் கேந்திரமாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பேசும்போது கூறியதாவது:-

ஜெயலலிதா கொண்டு வந்த 2023 தொலை நோக்கு திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது. அதற்கு முன்னுதாரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி வருகிறோம். ஒற்றை சாளர முறையில் தொழில் கூடங்கள் தொடங்க அனுமதி தருகிறோம். இதுவரை 667 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 627 விண்ணப்பங்களுக்கு உடனடி அனுமதி தந்து இருக்கிறோம். அதன் மூலம் ரூ.1,366 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது. 26 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com