ரூ.4 கோடியில் வானங்கோட்டகம் ஏரி தூர்வாரும் பணி

ரூ.4 கோடி செலவில் வானங்கோட்டகம் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.4 கோடியில் வானங்கோட்டகம் ஏரி தூர்வாரும் பணி
Published on

வாய்மேடு,

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்குள்ள விவசாயிகள் பருவ மழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 25 நாட்கள் கழித்து தான் வேதாரண்யம் ஒன்றிய எல்லையான தாணிக்கோட்டகம் பகுதியில் உள்ள முள்ளியாற்றிற்கு வந்து சேரும். இதனிடையே பருவமழை பெய்ய தொடங்கினால் முள்ளியாற்றில் இருந்து வரும் காவிரி நீருடன், மழை நீரும் சேர்ந்து வெள்ளபெருக்கு ஏற்படுகிறது.

இந்த வெள்ளநீர் வாய்மேடு பகுதியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரம் உள்ள ஆதனூர் ஊராட்சி மானாங்கொண்டான் வடிகால் ஆற்றில் கலக்கிறது. பின்னர் ஆதனூர் சட்ரஸ் பாலம் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நிலையில் மழைநீரை சேமிக்கும் வகையிலும், வெள்ள பெருக்கு ஏற்பட்டு மானாங்கொண்டான் ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தூர்வாரும் பணி

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர், வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் பகுதியில் வானங்கோட்டகம் ஏரி உள்பட பல்வேறு நீர் நிலைகளை தூர்வார உத்தரவிட்டார். அதன்பேரில் தாணிக்கோட்டகம் ஊராட்சி சேக்குட்டிதேவன்காடு பகுதியில் இருந்து நடுத்திட்டு வழியாக நைனாகுளம் வரை 192 ஏக்கர் பரப்பளவு கொண்ட வானங்கோட்டகம் ஏரி ரூ.4 கோடி செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தினமும் 10-க்கும் மேற்பட்ட பொக்லின் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இருந்து அள்ளப்படும் மண், ஏரியின் நான்கு கரைகளையும் பலப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. வானங்கோட்டகம் ஏரி தூர்வார உத்தரவிட்ட தமிழக அரசுக்கு தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர், துளசியாப்பட்டினம், வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com