காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு எதிரான வழக்கினை, 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்றும், 5 நீதிபதிகள் அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தனி நபர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த ஜனாதிபதியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், மாநில சட்டசபையின் அனுமதி இன்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், எனவே இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சய் கிஷண் கவுல், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த நவம்பர் மாதம் மனுதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அப்போது, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதுபற்றி விசாரணை நடத்திய நீதிபதிகள், இது தொடர்பான உத்தரவு மார்ச் 2-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று கடந்த ஜனவரி 23-ந் தேதி கூறினர்.

அதன்படி நேற்று நீதிபதிகள், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உரிய காரணமோ, தேவையோ இல்லை என்று கூறி மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com