அரியாங்குப்பம்,
புதுவையை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்திபெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமை அன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். தேரோட்டத்தை புதுச்சேரி கவர்னர் தொடங்கி வைப்பது பாரம்பரியமான நிகழ்வாகும்.
இந்த திருவிழாவில் புதுவையில் உள்ள 18 மீனவர் கிராமங்களை சேர்ந்தவர்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். தேரோட்டத்தன்று புதுவை அரசு சார்பில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். தேரோட்டத்தை தொடர்ந்து தெப்ப உற்சவம், முத்துப்பல்லக்கு நடைபெற்றும்.
இத்தகைய சிறப்பு மிக்க வீராம்பட்டினம் தேரோட்டம் இந்த ஆண்டு வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவில் அறங்காவலர் குழுவினர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப நிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி வழங்கப்படுகிறது. முககவசம் அணிந்து வர கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர் என்று தெரிவித்தனர்.