இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீசார் உஷார் 2½ லட்சம் கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பொது இடங்களில் உள்ள 2½ லட்சம் கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் போலீசார் உஷார் 2½ லட்சம் கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு
Published on

சென்னை,

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இலங்கையில் எங்கெங்கு இருக்கிறார்கள்?, அண்டை நாடுகளிலும் இருக்கிறார்களா? என்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 27-ந் தேதி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், 620 தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிக்கிய 555 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், மாநகர் பகுதியில் எங்கேயாவது சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? என்று பொது இடங்களில் உள்ள 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான உத்தரவை கூடுதல் போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் (பொறுப்பு) வெளியிட்டிருந்தார்.

சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அடையார், தியாகராயநகர் உள்பட 12 காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் தலைமையிலான போலீசார் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் யாருடைய நடமாட்டமாவது தெரிந்தால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி சென்னையில் யாரை சந்தித்தான்?

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹசன் என்பவன், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் முன்பு சென்னை மண்ணடி பகுதிக்கு வந்துசென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் முதல் நாள் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பலியான மனித வெடிகுண்டு பயங்கரவாதி ஹாசீமினுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் ஹசன் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழக உளவுத்துறை போலீசார், மண்ணடிக்கு வந்த ஹசன் யார் யாரை சந்தித்து சென்றான்? என்ற விவரங்களை ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com