இலங்கை அதிபர் தேர்தல்; முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல்; முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை
Published on

கொழும்பு,

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு போன்றவற்றால் நாடு நிலைகுலைந்திருக்கும் நிலையில், அங்கு நடைபெறும் தற்போதைய தேர்தல் உலக அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். எனினும் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் கொண்டு செல்லப்பட்டு, 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாலை 4.30 மணியளவில் வெளியான முடிவின்படி முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார்.

அவர் 9 மாவட்டங்களில் தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். மற்றொரு வேட்பாளரான சஜித் பிரேமதாசா 3 மாவட்டங்களிலேயே முன்னிலையில் உள்ளார்.

இதேபோன்று நாட்டின் தெற்கு பிரிவில் பதிவான வாக்குகளின்படி, ராஜபக்சேவுக்கு 65 சதவீத வாக்குகளும், பிரேமதாசாவுக்கு 28 சதவீத வாக்குகளும் கிடைத்து உள்ளன.

சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராஜபக்சேவும், தமிழ் சமூகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பிரேமதாசாவும் முன்னிலையில் உள்ளனர்.

தொடர்ந்து நடந்த வாக்கு பதிவு எண்ணிக்கை முடிவில் ராஜபக்சே 52.87 சதவீத வாக்குகளும், பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இடதுசாரி வேட்பாளர் அனுரா குமர திசநாயகே 4.69 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com