ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கருட மண்டபம் படித்துறைகளில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கருட மண்டபம் படித்துறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
Published on

திருச்சி,

தை மாதம் வரும் அமாவாசை தினத்தன்று நீர்நிலைகளில் குறிப்பாக கடல் அல்லது ஆறுகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது ஆசி கிடைக்கும் என ஐதீகமாக நம்பப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் நேற்று முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலையிலேயே ஏராளமானவர்கள் கூடினார்கள்.

அம்மா மண்டபம் படித்துறை மற்றும் கருட மண்டபம் படித்துறைகளில் இதற்காகவே அங்கு அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் வந்தவர்கள் தேங்காய், பழம், அருகம்புல், எள் போன்ற பொருட்களை கொடுத்து பூஜைகள் செய்தனர். முன்னோர்களின் பெயர்களை கூறி புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்த பின்னர் அந்த பூஜை பொருட்களை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். சிலர் பிண்டங்கள் செய்து அவற்றிற்கு பூஜைகள் செய்தும் தண்ணீரில் கரைத்தனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து தர்ப்பணம் செய்ததால் காவிரி கரை நேற்று காலையில் இருந்து மதியம் வரை பரபரப்புடன் காணப்பட்டது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் காவிரியில் புனித நீராடினார்கள். காவிரியில் தற்போது தண்ணீர் அதிக அளவில் இல்லை என்றாலும் கால் நனையும் அளவிலாவது இருப்பது ஓரளவு நிம்மதியை தந்தது. சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய் நீரில் குளித்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டிற்கு அகத்தி கீரை வழங்குவதும் புண்ணியமாக கருதப்படுவதால் பெண்கள் அகத்தி கீரை வாங்கி அவற்றை பசுமாடுகளுக்கு இரையாக கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com