மதுரை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி. கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு சரிவர ஆஜராகாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு, நிர்மலாதேவிக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதற்கிடையில் தலைமறைவாக இருந்த நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதை தாடர்ந்து நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கை நீதிபதி விசாரித்து நிர்மலாதேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர் நேற்று காலை மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.