திருப்பூரில் மாணவனுடன் ஓட்டம் பிடித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி

திருப்பூரில் மாணவனுடன் ஓட்டம் பிடித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி, வெளியூர் செல்ல பஸ்சுக்காக காத்து நின்றபோது போலீசில் சிக்கினர்.
Published on

பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.படிக்கும் மாணவி ஒருவர், சம்பவத்தன்று வீட்டில் இருந்த மொபட்டை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த மாணவி பள்ளிக்கு சென்றாரா? என்று அவருடைய பெற்றோர் அந்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த மாணவி பள்ளிக்கும் போகவில்லை என தெரியவந்தது. பின்னர் அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர்.

இதற்கிடையில் காணாமல் போன மாணவி குறித்து தகவல் சேகரிக்க அந்த மாணவி வகுப்பில் படிக்கும் சக மாணவிகளை வகுப்பு முடிந்ததும் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று நீண்டநேரமாக விசாரித்தனர்.இதனால் அந்த மாணவிகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

இதனால் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அந்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போதுதான் மாணவிகள் அனைவரும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் காணாமல் போன மாணவி என்ன ஆனார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் காணாமல் போன மாணவியின், வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவனும் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அந்த மாணவி, தன்னுடன் படிக்கும் மாணவனுடன் பஸ்சில் வெளியூர் செல்வதற்காக திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான் அந்த மாணவனும், மாணவியும் நெருங்கி பழகி வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவதன்று அந்த மாணவி வீட்டில் உள்ள மொபட்டை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றதும், பின்னர் அந்த மாணவருடன் இரவு முழுவதும் நண்பரின் அறையில் தங்கி இருப்பதும், பின்னர் நேற்று வெளியூர் செல்ல புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com