பால் உற்பத்தி நிறுவனம் தொடங்க எதிர்க்கட்சிகள் தடை - அமைச்சர் கந்தசாமி புகார்

பால் உற்பத்தி நிறுவனம் தொடங்க எதிர்க்கட்சிகள் தடையாக இருந்து வருகின்றன என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
Published on

பாகூர்,

புதுவை மாநிலம் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட சேலியமேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளிக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழாவுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். புதிய கட்டிடத்தை அமைச்சர் கந்தசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றுக் கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதனால் தனியார் தொழிற்சாலைகள் மூலம் நிதி பெற்று பல பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை சரி செய்து வருகின்றோம்.

கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறையில் அதிகப்படியான ஆட்கள் நியமனத்தால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு நிதியில் இருந்து கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிதி வழங்க முடியாது என கவர்னர் முட்டுக்கட்டை போட்டுள்ளதால் 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் போட முடியவில்லை.

கிருமாம்பாக்கம் பகுதியில் பால் உற்பத்தி நிறுவனம் தொடங்கவும், பால் பொருட்கள் தயாரிக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது என எதிர்க்கட்சியினர் தடையாக இருந்து வருகின்றனர். ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப்பள்ளிக்கும் தடையாக உள்ளனர். தடையை மீறி அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உறைவிட பள்ளி கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது. அதனை கவர்னர் கிரண்பெடி தடுத்து நிறுத்தி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் பயனாளிகள் அந்த பணத்தை வேறு தேவைக்கு செலவு செய்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் அரிசி வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

கவர்னர் கிரண்பெடி அரசுக்கு எதிரானவர்கள் கொடுக்கும் புகார்களிலும், சிறிய பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துகிறார். மக்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்று கவனிப்பதில்லை. நாங்கள் வழங்கும் அரிசி தரமில்லை என்றால் மக்களுக்கு தரமான அரிசியை கவர்னரே வழங்கினால் நன்மையாக இருக்கும். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். புதுவை - காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண் இயக்குனர் சீதாராமன், நிர்வாகிகள் கைலாஷ் காந்த், ரமேஷ், சரவணக் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி மற்றும் ஆசிரியர்கள் செய் திருந்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com