

பிஸ்கெக்,
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில், கடந்த 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் அல்மாஸ்பெக் அடாம்பயேவ். இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததையடுத்து, அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கைது நடவடிக்கையை தவிர்க்க அடாம்பயேவ், தலைநகர் பிஸ்கெக்கில் உள்ள தனது வீட்டில் பதுங்கினார். போலீசார் மற்றும் ராணுவத்தினர் வீட்டுக்குள் நுழையாதபடி அவரது வீட்டை சூழ்ந்து கொண்டு ஆதரவாளர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அடாம்பயேவை கைது செய்வதற்காக சிறப்பு அதிரடிப் படையினர் அவரது வீட்டை சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கிகளுடன் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து அடாம்பயேவை கைது செய்ய முற்பட்டனர்.
ஆனால் அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையான தாக்குதல் நடத்தி, கைது நடவடிக்கையை தடுத்தனர். இதில் சிறப்பு அதிரடிப்படை வீரர் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 6 வீரர்களை அவர்கள் சிறை பிடித்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து திரும்பினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அடாம்பயேவின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரது ஆதரவாளர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த சக வீரர்களை மீட்டனர்.