தேர்தல் நாளில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை காலையில் எழுப்பி வாக்களிப்பதற்கு அனுப்பி வையுங்கள் கலெக்டர் பேச்சு

தேர்தல் நாளில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை காலையில் எழுப்பி வாக்களிப்பதற்கு அனுப்பி வையுங்கள் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
Published on

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது 100 சதவீத வாக்குப்பதிவு அடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள 903 பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கடிதம் எழுதினர்.

அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதி மொழி கடிதம் பெற்று பள்ளிகளில் வழங்கினர்.

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் உறுதி மொழி கடிதத்தை கலெக்டர் கந்தசாமி பெற்றுக்கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் ஜனநாயக முறையில் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் 84 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர்களிடம் பள்ளி மாணவர்கள் மூலமாக 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி ஒரு லட்சம் மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி கடந்த வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். மாணவர்கள் உங்கள் பெற்றோர்களை வருகிற 18-ந் தேதி வாக்குப்பதிவுயன்று கண்டிப்பாக வாக்களிக்க செய்ய வேண்டும். பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு தினமும் காலையில் எழுப்பி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் தேர்தல் நாளில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை காலையில் எழுப்பி வாக்களிப்பதற்கு அனுப்பி வையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கலெக்டர் கந்தசாமி, மாணவர்களிடம் வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான வயது, வாக்குப்பதிவு நேரம், வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட தேர்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு சரியாக பதில் அளித்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், தேர்தல் அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com