லட்சியத்தை அடைய மாணவர்களிடம் ஆர்வம் இருக்க வேண்டும் திருச்சி என்.சிவா, எம்.பி. பேச்சு

‘லட்சியத்தை அடைய மாணவர்களிடம் ஆர்வம் இருக்க வேண்டும்’ என்று திருச்சி என்.சிவா, எம்.பி. கூறினார்.
Published on

தூத்துக்குடி,

லட்சியத்தை அடைய மாணவர்களிடம் ஆர்வம் இருக்க வேண்டும் என்று திருச்சி என்.சிவா, எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் பாலின கல்வி குறித்த ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் வாசுகி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் மோனிகா ராம்ராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி என்.சிவா எம்.பி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இன்றைய மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பிழையின்றி பாடத் தெரியவில்லை. மொழியும், நாடும் நமது இரு கண்கள். நாம் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடும் போது தமிழ் உணர்வு, மொழிப்பற்று ஏற்படுகிறது. தேசிய கீதத்தை பாடும் போது இந்தியன் என்ற பெருமையும், தேசியப்பற்றும் உருவாகிறது.

தமிழ்மொழி எத்தனையோ மாற்றங்களை சந்தித்த போதும் இன்றும் உயிர்ப்போடு உள்ளது. இங்கு இருக்கும் மாணவிகள் அனைவரும் குடும்பத் தலைவிகளாக மாறும் போது, உங்களுக்கு சமுதாய கடமை ஒன்று உள்ளது. அது உங்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்றுக் கொடுப்பது ஆகும். நீங்கள் வீட்டில் இருக்கும் போது நல்ல தமிழில் பேசுங்கள். நல்ல தமிழ்நூல்களை படியுங்கள்.

எதிர்கால திட்டம் குறித்து பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட கூறாதீர்கள். திட்டத்தை மனதில் வைத்து அமைதியாக செயல்படுங்கள். திட்டங்களை கொஞ்சம், கொஞ்சமாக நிறைவேற்றி முன்னேறுங்கள். முழுமையாக வெற்றி பெற்ற பிறகு அருகே இருப்பவர்கள், தானாக தெரிந்து கொண்டு உங்களை வியந்து பார்ப்பார்கள். ஏனென்றால், கேலி, கிண்டல் பேசும் உலகம் இது. நாம் எதை கூறினாலும் கேலி செய்வார்கள். கிண்டல் செய்வார்கள். சூழ்ச்சி செய்வார்கள். எத்தனை சூழ்ச்சி வந்தாலும் துவண்டு விடாதீர்கள். வீழ்ந்தவன் சாதாரணமானவன், எழுந்தவன் தான் சாதனையாளன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் விரும்பும் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். எனவே தமிழ் உணர்வு, நாட்டு உணர்வு, லட்சிய உணர்வோடு முடிவெடுங்கள். எழுச்சிமிகு எதிர்காலம் உங்களுக்காக காத்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். கருத்தரங்கில் திரளான மாணவிகள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர். பேராசிரியை பாலசண்முகதேவி நன்றி கூறினார்.

பின்னர் திருச்சி என்.சிவா எம்.பி நிருபர்களிடம் கூறும் போது, தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது. அவர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்யவில்லை. இலங்கையை நட்பு நாடு என்ற மத்திய அரசு கூறுவது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்களின் எல்லை தாண்டி மீன்பிடித்தால் அதிக அபராதம் விதிப்பது கண்டனத்துக்கு உரியது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com