வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானிய உதவி - கலெக்டர் வினய் தகவல்

வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க அரசு மானிய உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
Published on

மதுரை,

வேளாண்மையில் நவீன வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரபலப்படுத்துவதன் மூலமாக கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிட முடியும். மேலும் வேளாண் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, வேளாண் பணிகளை உரிய காலத்தில் செய்து முடிக்க முடியும். அதோடு வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், வேளாண் எந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண் எந்திர மயமாக்கல் சார்பு இயக்கத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் மதுரை மாவட்டத்தில் முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு வேளாண் எந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் வட்டார அளவில் அமைக்க ஒரு மையத்திற்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மானிய தொகையில் பொது பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதி கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும்.

மீதித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரி பார்த்த பிறகு மானிய இருப்பு தொகை வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை பெற மதுரை உபகோட்ட அலுவலக தொலைபேசி எண் 0452-2677990-ல் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com