புதுடெல்லி
கடந்த 2014 ஆம் ஆண்டில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் தனது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று கோரி பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள், ஆதாரங்கள் அழிக்கப்படுவதாகவும், விசாரணையை சசி தரூர் தனது செல்வாக்கால் நீர்க்கச் செய்வதாகவும், நீண்டகால தாமதம் காரணமாக நீதி அமைப்பின் மீது களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சுனந்தாவின் மரணம் தேசிய, சர்வதேசிய முக்கியத்துவம் கொண்டது. கிரிக்கெட்டில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் மரணமடைந்துள்ளார் என்று சுவாமி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இணைந்த புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து வழக்கை விசாரிக்கும்படி அவர் கோரினார்.
டெல்லி காவல்துறையின் வழக்கறிஞர் விசாரணை அமைப்பின் வழக்கின் நிலை குறித்த அறிக்கை தன்னிடம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் அதைத் தாக்கல் செய்யும் முன் தான் அதை ஒருமுறை பார்வையிட விரும்புவதாகவும் தெரிவித்தார். நீதிமன்றம் இதன் மேம்பட்ட பிரதி ஒன்றை சுவாமி, உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐக்கு வழங்கும்படி கூறி விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
இந் நிலையில் சுனந்தாவின் மகன் (முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்தவர்) ஷிவ் மேனன் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சுப்ரமணியன் சுவாமிக்கு இவ்வழக்கில் பங்கேற்கும் உரிமை ஏதும் கிடையாது என்றும் இவ்வழக்கின் விவரங்களை சமூக வலைத்தளங்கில் அவர் வெளியிடக்கூடாது என்றும் கோரினார். அது மட்டுமின்றி பத்திரிகைகள், பொது மக்கள் ஆகியோருக்கும் தகவல்கள் எதையும் அவர் கொடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். முதலில் காவல்துறையினர் நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும். அதன் பிறகு வழக்கில் தொடர்புடையோருக்கு அதன் பிரதிகளை வழங்கலாம் என்றார். நீதிபதி ஷிவ் மேனன் மனு மீதான விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.