பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்; 77 பேர் கைது

பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on

ஈரோடு,

தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று போராட்டம் நடந்தது.

அதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பகல் 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் சிவகிரி கடைவீதியில் உள்ள ரோட்டில் நேற்று பகல் 11 மணி அளவில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி, சங்க செயலாளர்கள் கனகவேல், தங்கவேல், சிவலிங்கம், கணேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்தனர்.

பின்னர் அனைவரும் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கவுந்தப்பாடி 4 வழிச்சாலை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார்.

இதில் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் திருத்தணிகாச்சலம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத்தலைவர் பாலு, மாவட்டத்தலைவர் அய்யாவு, பொருளாளர் விஜயகுமார், கோபி தாலுகா செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 47 பேரை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். மொத்தம் சிவகிரி, கவுந்தப்பாடியில் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் அந்தியூர், பவானியிலும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com