ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - சென்னை ஐகோர்ட்டை அணுக உத்தரவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துடன், சென்னை ஐகோர்ட்டை அணுக உத்தரவிட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - சென்னை ஐகோர்ட்டை அணுக உத்தரவு
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும் பொதுமக்கள் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தரப்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந் தேதி அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற திட்டங்களால் காவிரி டெல்டா பகுதியில் நிலத்தடி நீரும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உருவாகும் என்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மக்களின் கருத்துகளை கேட்காமல் செயல்படுத்த நினைக்கும் இதுபோன்ற திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அரசியல் சட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் இந்த அறிவிப்பாணைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், மனுதாரர் முதலில் ஐகோர்ட்டை அணுகி இருக்கவேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஜி.எஸ்.மணி பதில் அளிக்கையில், இந்திய அளவில் இந்த அரசாணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதனால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், முதலில் ஐகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com