அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்து இருக்கிறது - டெலிவிஷனில் பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்து இருக்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு பல ஆண்டுகால வரலாறாக நீடித்து வந்த முக்கியமான ஒரு பிரச்சினையின் மீது தனது தீர்ப்பை வழங்கியது. இன்று(நேற்று) வெளியான தீர்ப்பு பல ஆண்டுகளாக நீடித்து வந்த நீதிமன்ற செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. நமது ஜனநாயகம் எவ்வளவு உயிர்த்துடிப்பானது, வலிமையானது என்பதையும் உலகம் தெரிந்து கொண்டது. இந்த தீர்ப்பை நாடு முழுவதிலும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு மதத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இந்த தினம் பொன் நாள் ஆகும். இன்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாகும். நாட்டின் நீதித்துறையின் பொற்காலத்தின் தொடக்கம்தான் இது. இந்த தீர்ப்பு ஒருமனதாக இருந்ததோடு, மிகுந்த துணிவுமிக்கதாகவும் இருந்தது. இந்த தீர்ப்பின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு தனது மன உறுதியை, திண்மையை எடுத்துக்காட்டியது. இதற்கு நமது நீதித்துறைக்கு சிறப்பான பாராட்டுதல்களை தெரிவிக்கவேண்டிய தேவை எழுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஒன்றுபட்டு நின்று, ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் வாழவேண்டும் என்ற செய்தியை நமக்குத் தருகின்றது. எவர்மீதும் எந்தவிதமான வெறுப்பு உணர்வும் இருக்கலாகாது. புதிய இந்தியாவில், அச்சத்திற்கோ, கசப்புணர்வுக்கோ, எதிர்மறை உணர்விற்கோ இடமே இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு புதியதொரு விடியல் தொடங்கியிருப்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

ராமர் கோவிலை கட்டுவதற்கான ஒரு முடிவை சுப்ரீம் கோர்ட்டு நமக்கு வழங்கியுள்ளது. இந்த முடிவு நமது நாட்டை வளர்த்தெடுப்பதற்கான நமது கடமையை, மேலும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பை, குடிமக்களின் மீது சுமத்தியுள்ளது. நாட்டின் குடிமக்கள் என்றவகையில் நாட்டின் சட்டத்தையும், அதன் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com