

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவாஜ் மறைவு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயிடம் பேசியுள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தை இந்தியா சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. விசாரணை முடிவில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் ஜாதவுக்காக வாதாடிய ஹரிஷ் சால்வே தனக்கு சம்பளமாக வெறும் ரூபாய் 1-ஐ மட்டும் அடையாள தொகையாக கோரியிருந்தார். அவரை இந்திய அரசு நியமித்தபோது சுஷ்மா சுவராஜ் வெளியுறவு அமைச்சராக இருந்தார். ஹிரிஷ் சால்வேயின் பணியை பலரும் பாராட்டினர்.
நேற்றிரவு 8.45 மணியளவில் ஹரிஷ் சால்வே தொலைபேசியில் சுஷ்மாவுடன் பேசியிருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் மறைவு செய்தி வெளியானது. இதுதொடர்பாக மிகுந்த வேதனையுடன் பேசியுள்ள ஹரிஷ் சால்வே, சுஷ்மா சுவராஜ் என்னுடைய சகோதரி போன்றவர். பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவ் வழக்கில் அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியது. சுஷ்மா தன்னுடைய பதவிக்காலத்தில் பார்வைக்கு செல்லாமல் ஜாதவ் வழக்கு தொடர்பாக ஒரே ஒரு தாள்கூட வெளியே செல்ல முடியாது. அந்த வழக்கில் ஆஜரானதற்காக நான் கோரியிருந்த 1 ரூபாய் கட்டணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது மறைவுச் செய்தி வந்தது. என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பொது வாழ்வில் பெரிய வெற்றிடத்தை அவரது மறைவு ஏற்படுத்தி உள்ளது எனக் கூறியுள்ளார்.