நெல் நடுவைக்குள் கனரக வாகனங்கள்... விவசாயிகள் வேதனை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகையில் நெல் நடுகைக்குள் கனரக வாகனங்கள் இறக்கப்பட்டு கெயில் நிறுவனத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் விவசாயிகளை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
Published on

நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இருந்து நாங்கூர், காத்திருப்பு, தலச்சங்காடு, காளகஸ்திநாதபுரம் வழியாக மேமாத்தூர் வரை 29 கி.மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் எரிவாயு கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கிராமத்தில் நிலத்தடிநீரை பயன்படுத்தி தற்போது கோடை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள், பம்புசெட் மூலம் நிலத்தடிநீரை இரைத்து விளைநிலங்களை உழும் பணியை மேற்கொண்டனர். தற்போது விளைநிலங்களில் நாற்றங்கால் வளர்ந்து நடவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விளைநிலங்களில் கெயில் நிறுவனத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்சத குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், குழாய்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் நேற்று உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் பொக்லின் எந்திரங்களை கொண்டு ராட்ச குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது.

இதனால் நடவு செய்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் விளைநிலத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்த பகுதியில் இறங்கி அங்கிருந்த சேற்றை எடுத்து உடலில் பூசிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், விளைநிலங்களை பாழாக்கும் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை உடனே நிறுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் போராட்டத்தால் குழாய்கள் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விளைநிலங்களில் கனரக வாகனங்கள் மூலம் மண் அகற்றப்படுகிறது. இவைகளால் நிலங்கள், நெற்பயிர்கள் சேதம் அடைகிறது. போர்வெல் குழாய்களும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேதனையில் கண்ணீர் விடுகிறார்கள். சீர்காழி பகுதி விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில் கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் வேலை மொத்த விவசாயத்தை பாதிப்படைய செய்துள்ளது. கனரக வாகனங்கள் இறங்கிய இடங்களை இனி எளிதாக சரிசெய்ய முடியாது, சாகுபடி பாதிக்கும், எனக் கூறியுள்ளார்.

குறுவை சாகுபடி முடிவும் வரையிலாவது குழாய்கள் பதிக்கும் பணியை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com