

காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலீபான்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.
அதன் பலனாக நேற்று முன்தினம் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ முன்னிலையில், அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்ஜாத்தும், தலீபான் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், இரு தரப்பு கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆப்கானிஸ்தான் அரசின் காவலில் 5 ஆயிரம் தலீபான்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தான் படையினர் 1000 பேர் தலீபான்கள் காவலில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி, காபூலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 5 ஆயிரம் தலீபான் கைதிகளை விடுவிக்க எந்த உறுதியும் அளிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இது ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமை மற்றும் சுய விருப்பம் சார்ந்தது ஆகும். இது பற்றி தலீபான்களுடனான பேச்சு வார்த்தை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற முடியும். ஆனால் பேச்சு வார்த்தைக்கு இது ஒரு முன்நிபந்தனையாக இருக்க முடியாது என குறிப்பிட்டார்.