தாம்பரம்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர், 6-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், பெருங்குடியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி பிரசவத்துக்காக சொந்த ஊரான கோவைக்கு சென்று உள்ளார். கடந்த வாரம் முருகன், வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியை பார்க்க கோவைக்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் இரவு முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டைச்சேர்ந்த சரோஜா என்பவர் இது குறித்து முருகனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நேற்று காலை கோவையில் இருந்து சென்னை வந்த முருகன், தனது வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அதில் மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
மேலும் அதே வளாகத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்தோஷ் (25). இவர், தனியார் தொழிற்சாலையில் என்ஜினீயராக உள்ளார். இவருடைய மனைவி காயத்ரியும் பிரசவத்துக்காக சொந்த ஊரான புதுச்சேரிக்கு சென்றிருந்தார்.
சந்தோஷும், வீட்டை பூட்டிவிட்டு மனைவியை பார்க்க சென்றுவிட்டார். மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை சீனிவாசா நகர் சூரத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(31). சமையல்காரரான இவர், சமையல் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் அவருடைய மனைவி, வீட்டை பூட்டிவிட்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின்பேரில் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.