குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருப்பூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
Published on

திருப்பூர்,

மக்களை பிரிக்கும் மதவெறி சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்தியாகிரக ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பித்து பேசினார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகர தலைவர் கிருஷ்ணன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

13 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளன. அதுபோல் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள சரத்துகளை மாற்றம் செய்ய பரிசீலிப்பதாக அ.தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com