

கரூர்,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மதிய உணவு சமைக்கும் போது சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள கிருஷ்ணராயுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் வழக்கம்போல் மாணவர்களுக்கான மதிய உணவு சமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த ரப்பர் குழாயில் எதிர்பாராத விதமாக பழுது ஏற்பட்டு, பலத்த சத்தத்துடன் கியாஸ் கசிவு ஏற்பட்டது. கசிந்த கியாஸ் நொடிப் பொழுதில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் சமையலறை முழுவதும் கரும்புகை சூழ்ந்ததது. இதைக் கண்ட சமையல் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தீப்பற்றியதை உணர்ந்த சமையல் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் உடனடியாக சமையலறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் மற்றும் காயங்கள் எதுவும் இன்றி ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனர். பள்ளி வளாகத்தில் மதிய உணவு சமைக்கும் போது நிகழ்ந்த இந்த திடீர் தீ விபத்து, அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.