சூரப்பா மீதான விசாரணைக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் - உயர்கல்வித்துறை ஒப்புதல்

ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சூரப்பா மீதான விசாரணைக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் - உயர்கல்வித்துறை ஒப்புதல்
Published on

சென்னை,

கடந்த 2018 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவர் பணியில் இருந்த போது அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

மேலும் மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு மறுப்பு உள்ளிட்ட பிரபல விவகாரங்களில் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதுமட்டுமில்லாமல், சூரப்பா ரூ.248 கோடி ஊழல் செய்வதாகவும் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த விசாரணைக் குழுவானது அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், பணியாளர்களிடம் விரிவான விசாரணை நடத்தியது. 3 மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணை முழுமை அடையாததன் காரணமாக மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சூரப்பாவைத் தவிர அனைத்து தரப்பினரிடமும் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சூரப்பாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்குமாறு விசாரணைக்குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு சூரப்பா அனுப்பிய பதில் மனுவில், விசாரணைக்குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் தான் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என திட்டவட்டமாக அவர் பதிலளித்திருந்தார்.

இதையடுத்து விசாரணைக்குழு இந்த விசாரணையின் முடிவான அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு, உயர்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், சூரப்பா மீதான புகாரில் இறுதிக்கட்ட அறிக்கை தயார்செய்ய வேண்டியிருப்பதால் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விசாரணைக்குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்து அவகாசம் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com