

எண்ணூர்,
குழந்தை தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த முறுக்கு கம்பெனி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவொற்றியூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
சென்னை எண்ணூர் அடுத்த எர்ணாவூர் பாரதியார் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் போத்திராஜா (வயது 52). இவர் அப்பகுதியில் நெய் முறுக்கு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களை கொத்தடிமைகளாகவும் வைத்திருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கடந்த 2024-ம் ஆண்டு திருவொற்றியூர் தாசில்தார் வழக்கு தொடர்ந்தார். திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஆவடி போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ் ஏட்டு இளங்கோவன் ஆகியோர் இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வழக்கின் அனைத்துக் கட்ட விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திக் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், முறுக்கு கம்பெனி உரிமையாளர் போத்திராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.