

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவை சேர்ந்த 17 வயது இளம்பெண் போளூரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2022-ம் ஆண்டு பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பணிக்கு சென்ற அந்த இளம் பெண் இரவில் வீடு திரும்பவில்லை. மாயமான இளம் பெண் குறித்து அவரது பெற்றோர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கலசபாக்கம் தாலுகா காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சின்னராசு (வயது 28) என்பவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த இளம் பெண்ணை அவரிடம் இருந்து மீட்டனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னராசுவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக கிருஷ்ணராஜ் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார். அதில் சின்னராசுவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் சின்னராசுவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.