

சென்னை,
தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் கொலை சம்பவங்கள், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்கும் நிகழ்வுகள் ஆகியவை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
தலைமை செயலாளர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டம், இந்த வாரத்தில் முதல்-அமைச்சர் நடத்தும் 3-வது சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டமாகும். இதில், மாநிலத்தில் பதிவான பல்வேறு கொலை வழக்குகள், அவற்றின் பின்னணி மற்றும் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விரிவாக விளக்கினர். அப்போது, காவல்துறையை வலுப்படுத்தும் விதமாக அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு, தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, குற்ற பின்னணி கொண்ட 19,000 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையில் நிலவும் பணியிட பற்றாக்குறையை போக்க, 10,000 முதல் 15,000 காவலர்களை நியமிக்கும் பணியை முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தொடங்கியுள்ளோம். நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்ந்த விவகாரங்களை முதல்-அமைச்சர் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
மேலும், மாநிலத்தில் சுமார் 6,700 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 2,800 வழக்குகள் மே 10-க்கு முந்தைய சம்பவங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகளில் அடையாளம் காணப்பட்ட 3,229 குற்றவாளிகளில், 152 பேரை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்களை தடுக்க நேரடியாக களத்தில் இறங்கி மேற்கொள்ளும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, முதல்-அமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.