10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
Published on

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் மீண்டும் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்த அறிவிப்பு வரும் வரை 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை தவிர, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு நடைபெற இருப்பதன் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்வித்துறை தரப்பில் காரணமாக சொல்லப்படுகிறது.

இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதியில் இருந்து முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வி துறை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், அதே தேதியில் எந்த மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கும் 10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வை மிகுந்த கவனத்துடன் நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒரு அறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும் என்றும் விடைத்தாள்களில் பள்ளியின் பெயர், முத்திரை, மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்யவும், முகக்கவசம், கிருமி நாசினி தெளித்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com