11 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு: ராமேஸ்வரத்தில் இன்று வேலை நிறுத்தம் அறிவிப்பு

11 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்தது, அவர்களது குடும்பத்தினரை மிகுந்த கவலை அடையச்செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராமேஸ்வரம்,

11 தமிழக மீனவர்களை இலங்கையில் சிறையில் அடைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு என்ஜின் பழுது

ராமேஸ்வரத்தில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் 11 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது படகு என்ஜின் பழுதாகியதால் கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தில் அந்த படகு இழுத்துச் செல்லப்பட்டு இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியது.

மீனவர்கள் கைது

அந்த நேரத்தில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பழுதான படகில் பரிதவித்த 11 மீனவர்களையும் சிறைபிடித்து கைது செய்து, நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

பின்னர் 11 பேரும் நேற்று நெடுந்தீவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது, 11 மீனவர்களையும் வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி நளினி உத்தரவிட்டார். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மனிதாபிமான அடிப்படையில்

படகு பழுதானதால் கைது நடவடிக்கையில் சிக்கிய 11 மீனவர்களும் மனிதாபிமான அடிப்படையில் படகுடன் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சிறையில் அடைக்க இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது, அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களை கவலை அடையச் செய்திருந்தது.

வேலை நிறுத்தம்

இந்நிலையில் 11 தமிழக மீனவர்களை இலங்கையில் சிறையில் அடைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் இன்று ஒருநாள் (சனிக்கிழமை) வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com