120 ஆடுகள்... விடிய விடிய கறிவிருந்து... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி சாமி திருவிழா

அனல் பறந்த அடுப்புகளில் பெரிய பெரிய அண்டாக்களில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது.
120 ஆடுகள்... விடிய விடிய கறிவிருந்து... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி சாமி திருவிழா
Published on: 

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை கரையோரம் சடையாண்டி சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத கடைசி வளர்பிறையில் நள்ளிரவில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். சடையாண்டியிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறிய பின் காணிக்கையாக ஆடுகளை வழங்குவது வழக்கம்.

அதன்படி நேற்று இரவு தொடங்கிய திருவிழா விடிய விடிய வழிபாடு நடைபெற்றது. முதலில் பெரிய முத்தாலம்மன் கோயில் இருந்து சாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சடையாண்டி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின்னர் காணிக்கையாக பக்தர்கள் 120-க்கும் மேற்பட்ட ஆடுகளை வழங்கினர்.

தொடர்ந்து சடையாண்டி சாமிக்கு உப்பு, சீனி இல்லாத பொங்கல் தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டது. அதன்பின் வெள்ளை நிறம் இல்லாத கருப்பு முடி உள்ள ஆடு பலியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடுகள் ஒவ்வொன்றாக பலியிடப்பட்டு அந்த இறைச்சி மூலம் அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. அனல் பறந்த அடுப்புகளில் பெரிய பெரிய அண்டாக்களில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது.

அசைவ உணவு தயாரிக்கப்பட்டதும் சடையாண்டிக்கு படையலாக போடப்பட்டு பூஜைகள் நடந்தது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் கறிவிருந்தில் பங்கேற்று உணவு அருந்தி சென்றனர். விழாவை காணவும், அன்னதானத்தில் பங்கேற்கவும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மின் விளக்கு வெளிச்சம் எதுவும் இல்லாமல் பரம்பரை பரம்பரையாக எவ்வாறு விழா கொண்டாடப்பட்டதோ அதேபோல பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் விழா நடைபெற்றது. காலம் காலமாக நடத்தப்படும் இந்த விழாவில் பக்தர்கள் ஒற்றுமையுடன் பங்கேற்று வழிபாடு நடத்துவதாக நாட்டாமைகள் செல்வம், அழகுதுரை தெரிவித்தனர்.

X