கோவையில் கத்திமுனையில் 1.25 கிலோ தங்ககட்டிகள் கொள்ளை.. கேரளா விரைந்த தனிப்படை

கோவையில் நகை வியாபாரி சென்ற காரை லாரியை கொண்டு வழிமறித்து தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை,
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப்(வயது 55). நகை வியாபாரியான இவர் அந்தப்பகுதியில் நகைப்பட்டறை மற்றும் நகைக்கடை வைத்துள்ளார்.
இவர் வழக்கமாக சென்னை சென்று அங்குள்ள நகைக்கடைகளில் இருந்து தங்கக்கட்டிகளை வாங்கி வந்து அவற்றை நகையாக செய்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி ஜெய்சன் ஜேக்கப் தனது கடையில் வேலை செய்து வரும் ஊழியர் விஷ்ணுவுடன்(20) நேற்று முன்தினம் மாலையில் சொகுசு காரில் கோவை வந்தார்.
பின்னர் அவர்கள் சென்னை சென்று, நகைக்கடைகளில் 1.25 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிவிட்டு ரெயில் மூலம் கோவை திரும்பினர். பிறகு ஜெய்சன் ஜேக்கப் தனது கார் மூலம் திருச்சூர் புறப்பட்டார். காரை விஷ்ணு ஓட்டினார். அவர்கள் நேற்று காலை 7.15 மணியளவில் கோவை-பாலக்காடு ரோட்டில் எட்டிமடையை தாண்டி சென்று கொண்டு இருந்தனர்.
அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது திடீரென்று பின்னால் வந்த லாரி ஒன்று ஜெய்சன் ஜேக்கப் சென்ற காரின் முன்பகுதியில் குறுக்காக நின்று வழிமறித்து நின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு, பிரேக் பிடித்து காரை நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்து திபுதிபுவென 5 பேர் கொண்ட கும்பல் குதித்து ஜெய்சன் ஜேக்கப் காரை சூழ்ந்தது.
அந்த கும்பல் கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றின் உதவியுடன் கார் கண்ணாடியை உடைத்தது. இதனால் காரில் இருந்த ஜெய்சன் ஜேக்கப் அதிர்ச்சி் அடைந்தார். அவர் பயத்தில் அலறினார். பின்னர் அந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்த காரில் ஏறிக்கொண்டது.
ஜெய்சன் ஜேக்கப் கழுத்தில் கத்தியை வைத்த அந்த கும்பல், உன்னிடம் இருக்கும் 1.25 கிலோ தங்கக்கட்டிகளை எங்களிடம் கொடுத்து விடு, இல்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியது. இதனால் பயந்துபோன அவர் காரின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த தங்கக்கட்டிகளை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்தார்.
இதையடுத்து 2 கி.மீ. தூரம் சென்ற பின்னர் ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோரை தாக்கியதுடன், ஜெய்சன் ஜேக்கப் கையில் இருந்த ரூபாயை பறித்துவிட்டு காரை நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து 2 பேரையும் பிடித்து கீழே தள்ளிவிட்டு அந்த கும்பல் காருடன் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் செய்வது அறியாமல் திகைத்தனர்., இதுகுறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் தங்கக்கட்டிகளை பறிகொடுத்த ஜெய்சன் ஜேக்கப் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கக்கட்டிகள் சுத்தமான 24 கேரட் தங்கம் ஆகும். எனவே அதன் மதிப்பு ரூ.1.25 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதில் லாரியை விட்டு இறங்கி தங்க கட்டிகளை கொள்ளையடித்து காருடன் தப்பிச்சென்ற கும்பல், மலையாளத்தில் பேசி உள்ளனர். எனவே அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. எனவே இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதுடன், தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தங்க கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். 2 கார்கள், லாரி பிடிபட்ட நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.






