

சிவகங்கை,
சிவகங்கை அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ‘ஆசிரியம் கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வின் போது, சிவகங்கை அருகே உள்ள சோழபுரத்தில் எட்டிச்சேரிக் கண்மாயின் நடுப்பகுதியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் தமிழ் எழுத்தமைதியைக் கொண்டு, இது 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தொல்லியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
‘ஆசிரியம்’ என்பதற்கு அடைக்கலம் தருதல் அல்லது பாதுகாப்பு வழங்குதல் என்று பொருள். அக்காலத்தில் வணிகர்களுக்கும், ஊர் மக்களுக்கும் அஞ்சேல் என அடைக்கலமும், போதிய பாதுகாப்பும் வழங்கப்பட்டதை உறுதி செய்ய இவ்வகைக் கல்வெட்டுகள் நாட்டப்பட்டன.
அரசியல் மாற்றங்கள் மற்றும் நிலையற்ற ஆட்சி நிலவிய காலங்களில், வணிகர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க சிறப்புப் படைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டன. இந்த ஆசிரியம் கல்வெட்டுகள் குறிப்பிட்ட கிராமத்தையோ அல்லது வணிகக் குழுவையோ காவல் காப்பது பற்றிய அறிவிப்பை மக்களுக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்பட்டன.