பழனி அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 14 பேர் காயம்


பழனி அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 14 பேர் காயம்
x

பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.

இதில் 466 காளைகள் கலந்துகொண்டன. அதேபோல் 400 மாடுபிடி வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு, அவர்கள் மட்டுமே களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது வாடிவாசலில் இருந்து காளைகள் திமிலை சுழற்றியபடி திமிறிக்கொண்டு சீறிப்பாய்ந்தன

சில காளைகள் தனது திமிலை பிடித்த வீரர்களை முட்டி அந்தரத்தில் பறக்க விட்டது. அதை கண்டு ரசித்த பொதுமக்கள் விசில் அடித்தும், சத்தம் போட்டும் உற்சாகப்படுத்தினர். களத்தில் காளைகளின் விளையாட்டை கண்டு ரசித்ததோடு அதனை வீடியோ எடுத்தும் உரிமையாளர்கள் மகிழ்ந்தனர். இருப்பினும் மாடுபிடி வீரர்கள், காளைகளுடன் மல்லுக்கட்டினர். தீரத்துடன் காளைகளை அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர். போட்டியின்போது காளைகளை அடக்கியவர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், டி.வி., மின்விசிறி, தங்க நாணயம், வெள்ளி நாணயம், பாத்திரங்கள், மரக்கன்றுகள் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

1 More update

Next Story