பெண்ணிடம் 15 சரவன் தாலிச் செயின் பறிப்பு: குற்றவாளி 48 மணி நேரத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் பைக்கில் சென்றபோது மற்றொரு பைக்கில் வந்த நபர், அப்பெண் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துச் சென்றார்.
பெண்ணிடம் 15 சரவன் தாலிச் செயின் பறிப்பு: குற்றவாளி 48 மணி நேரத்தில் கைது.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில் பெண்ணிடம் 15 சவரன் செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 48 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 15 சவரன் செயினை மீட்டனர்.

பெண்ணிடம் 15 சவரன் தாலிச் செயின் பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புலியூர்குறிச்சி மெயின் ரோட்டில், கடந்த 2.11.2026 அன்று தனது குழந்தைகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தாலிச் செயினை, கருப்பு நிற பைக்கில் வந்த நபர் பறித்துச் சென்றார்.

போலீசார் தீவிர விசாரணை

இதுகுறித்து அநதப் பெண் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. சதீஷ் கண்ணன் மற்றும் ஏர்வாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றவாளி கைது; தாலிச் செயின் மீட்பு

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவ இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள நகைக்கடைகள் மற்றும் அடகுக்கடைகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த குற்றச்சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள் போலீசார் தொழில்நுட்ப உதவியுடன் துரிதமாகச் செயல்பட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய சவளைக்காரன்குளம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பவரை பறிக்கப்பட்ட 15 சவரன் செயினுடன் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவல்துறை அறிவுறுத்தல்

மேலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் கூட்ட நெரிசலிலோ, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாகவோ செல்லும்போது தங்களது நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செல்லவும் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டு வாசல்கள், கடைவீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயல்களை கண்காணிக்கவும், குற்றவாளிகளை விரைவாகக் கண்டறியவும் காவல்துறையினரின் விசாரணைக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

X