16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது - வாலிபர் மீது போக்சோ வழக்கு

கோப்புப்படம்
சிறுமியுடன் பழகிய வாலிபர் துபாயில் இருப்பதால், அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், 8-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். அவரை திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு பெற்றோர் அனுப்பியுள்ளனர்.
அப்போது அருகே உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். அங்கு பணிபுரியும் இடத்தில் சிறுமியும், திருச்சியை சேர்ந்த 21 வயது வாலிபரும் காதலித்தனர். இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதில் சிறுமி 8 மாத கர்ப்பமானார்.
இந்த நிலையில் குன்னூர் வந்த சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது தந்தை சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 8 மாத கர்ப்பமாக உள்ளதாகவும், தற்போது பிரசவ வலி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டதில், சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமியுடன் பழகிய வாலிபர் தற்போது துபாயில் இருப்பதால், அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






