

சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த வழக்கை 3-வது நீதிபதியாக ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். 3-வது நாளாக நேற்று இந்த வழக்கு அவர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் தனபால் சார்பில் டெல்லி மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-
பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களால் முதல்-அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சருக்கு எதிராக, கவர்னரிடம் மனுதாரர்கள் 18 பேரும் கடிதம் கொடுத்துள்ளனர். உட்கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்காமல் கவர்னரிடம் புகார் செய்தால், அது கட்சிக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலாகத்தான் கருதப்படும்.
இதை தனிநபருக்கு எதிரான தாக்குதலாக கருதமுடியாது. மனுதாரர்கள், தாங்கள் அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுக்கவில்லை என்றும், முதல்-அமைச்சருக்கு எதிராக மட்டுமே புகார் மனு கொடுத்ததாகவும் கூறுவதை ஏற்கமுடியாது. இது தனிநபருக்கு எதிரான புகார் இல்லை. ஆளும் கட்சிக்கு எதிரான புகாராகும்.
மேலும் கவர்னரிடம், அரசியலமைப்பு சட்டத்தின்படி கடமையை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்துள்ளனர். கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஒரு மாநில அரசை கலைக்கும் அதிகாரம் தான் உள்ளது. அப்படிப்பட்டவரிடம் கடமை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்தால், அதற்கு என்ன அர்த்தம்? தமிழக அரசை கலைத்துவிடுங்கள் என்று தானே அர்த்தம்.
அதனால், 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்ததில் சட்டவிதி மீறலோ, உள்நோக்கம் கொண்டதோ இல்லை. சபாநாயகர் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்துதான் இறுதி முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல சபாநாயகர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார் என்று நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. அதில் யாரும் குறுக்கிட முடியாது. சபாநாயகர் பதவியும், நீதிபதிக்கு இணையான பதவி ஆகும். அவருக்கும் முடிவெடுக்கும் அதிகாரங்கள் உள்ளது. எனவே சபாநாயகர் விபரீத முடிவை எடுத்துள்ளார் எனக்கூறுவதை ஏற்கமுடியாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பின்னர், டெல்லியில் வேலை உள்ளதால் தன்னால் இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளிக்கிழமை) ஆஜராக முடியாது என்று மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 3-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன்பின்னர், 6, 7, 8-ந் தேதிகளில் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதாகவும் நீதிபதி கூறினார்.