

சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. அக்கட்சிக்கு மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த 4 தொகுதிகளிலும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் கடையநல்லூர், சீர்காழி ஆகிய 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.
அதாவது, கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரனும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும் வெற்றி பெற்றனர்.
தற்போது, தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகி, த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், முதல்-அமைச்சர் விஜயை சந்தித்து பேசினார்.
ஆனால், ம.தி.மு.க.வின் 2 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், நேரடியாக த.வெ.க.வுக்கு ஆதரவு தர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், ராஜேந்திரன் (கடையநல்லூர்) மட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டார். செந்தில் செல்வன் (சீர்காழி) கலந்துகொள்ளவில்லை. தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதை விரும்பாத அவர், கூட்டத்தை புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் தி.மு.க.வில் இணையப் போவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று சென்னை அண்ணாநகரில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் செந்தில் செல்வன் மட்டுமல்லாது, ராஜேந்திரனும் கலந்துகொள்ளவில்லை. 2 பேருமே கலந்துகொள்ளாதது கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து, ம.தி.மு.க. தரப்பினரிடம் விசாரித்தபோது, பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, தி.மு.க. கூட்டணியை முறித்துக்கொண்டு த.வெ.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு தர ம.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இதை ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் ஆகியோர் விரும்பவில்லையாம். த.வெ.க.வில் இணைந்தாலும், இடைத்தேர்தலில் மீண்டும் இவர்கள் 2 பேருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில், கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான துரை வைகோவை இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவர் வெற்றி பெற்றால், த.வெ.க. அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் அவரும் பங்கேற்கவில்லை.
இதுபோன்ற, நகர்வுகளுக்கு மத்தியிலேயே ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ம.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பதை இன்று மதியம் 3.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.