டெல்லியில் தீ விபத்தில் சிக்கி 21 பேர் பலி - செல்வப்பெருந்தகை இரங்கல்

காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், காயமடைந்த 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

21 பேர் பலி

டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையிலேயே பிற விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

எனினும், தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

பலி எண்ணிக்கை உயரும் அபாயம்

இதுவரை 37 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களில் பலர் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

செல்வப்பெருந்தகை இரங்கல்

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த கோர விபத்தில் தங்களின் உயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் முழு குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com