

சேலம்,
சேலம் வழியாகச் சென்ற 4 ரெயில்களில் கடத்தி வரப்பட்ட 21½ கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ரெயில்வே தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு வரும் ரெயில்களில் சிலர் கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்திச் செல்கின்றனர். இதனைத் தடுக்க ரெயில்வே தனிப்படை போலீசார் ரெயில்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, அந்த ரெயிலின் முன்பதிவில்லாத பொதுப்பெட்டியில் கழிவறை அருகே ஒரு பை கேட்பாரற்றுக் கிடந்தது.
அந்தப் பையை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது, அதற்குள் 7 பிளாஸ்டிக் பார்சல்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் சோதனை செய்வதை அறிந்த மர்ம நபர்கள், கஞ்சாவைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதேபோல், சாலிமர்-நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ரெயிலின் முன்பக்க பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கிடந்த ஒரு பையைச் சோதனை செய்தபோது, அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், திப்ரூகர்-கன்னியாகுமரி விரைவு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவையும், சில்சார்-கோயம்புத்தூர் விரைவு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 3½ கிலோ போதைப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் வழியாகச் சென்ற 4 ரெயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 21½ கிலோ அளவிலான கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 18 கிலோ போதைப்பொருட்களும், 3½ கிலோ புகையிலைப் பொருட்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
வடமாநிலங்களில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்களைக் குறிவைத்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களைக் கடத்தும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.