விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலி: அரசு விரிவான அறிக்கையை அளிக்க கவர்னர் உத்தரவு

விஷச்சாராய மரணம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
விஷச்சாராயத்துக்கு 22 பேர் பலி: அரசு விரிவான அறிக்கையை அளிக்க கவர்னர் உத்தரவு
Published on

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விஷச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என்று அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், அந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல என்றும் தொழிற்சாலையில் இருந்து திருடி, விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த விஷச்சாராய இறப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காவல் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தை, காவல் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரை கொண்டு நடத்த வேண்டுமென்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் தக்க அறிவுரைகளை வழங்க வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை முதன்மைச்செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஷச்சாராய சாவு தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அதற்கான கடிதத்தை தலைமைச்செயலாளர் வெ.இறையன்புவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 2 ஆயிரம் பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் இல்லை என்றால், அவ்வளவு பேரை கைது செய்ய அவசியம் ஏன் நேரிட்டது? அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கமான அறிக்கையாக தர வேண்டும்.

இந்த சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் அறிக்கைகள் கூறுவது என்ன? அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது? என்பதையும் அறிக்கையாக அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com